ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்றால் என்ன?

 படித்ததில் புரிந்தது.
 
போன ஒரு மாசமாவே நம்ம நாட்டு பணத்தோட மதிப்பு விழுந்துக்கிட்டே வர்றத பார்த்துக்கிட்டு இருக்கோம். குறிப்பா அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பு கழுத தேஞ்சி கட்டெறும்பான கதையா குறைஞ்சிக்கிட்டே போவுது.
இதுக்கு உண்மையிலேயே என்னங்க காரணம்?
அதையெல்லாம் பாக்கறதுக்கு முன்னால எதுக்கு இந்த மாதிரி ஏறுது, இறங்குதுன்னு நமக்கு புரியற பாஷையில  பாக்கலாம்.
சாதாரணமா சந்தையில எந்த பொருளோட மதிப்பும் (மதிப்புன்னா விலைன்னு வச்சிக்கலாம்) ஏறவோ இறங்கவோ செஞ்சா அதுக்கு நம்மள மாதிரி ஜனங்க, குறிப்பா வாங்கறவங்க மத்தியில இருக்கற அந்த பொருள் மேல இருக்கற விருப்பும் வெறுப்பும்தான் முக்கிய காரணம். அதாவது, ஒரு பொருள் எனக்கு ரொம்ப தேவைன்னா அது எவ்வளவு விலை இருந்தாலும் வாங்கிறணும்னு தோனும். அதுக்கு நேர் மாறா ஒரு பொருள் எனக்கு தேவை இல்லைன்னா அது எவ்வளவு சீப்பா கிடைச்சாலும் வாங்கணும்னு தோனாது.
ரெண்டாவது, அது சந்தைக்கு வர்ற அளவு. சந்தையில ஒரு பொருள் ஜாஸ்தியா கிடைக்குதுன்னா அதாவது அத விரும்பி வாங்கறவங்களோட எண்ணிக்கையை விட அதிகமா கிடைச்சிதுன்னா அதோட விலை இறங்கத்தான் செய்யும்.
உதாரணத்துக்கு ஒரு மாசத்துக்கு முன்னால நார்த்ல பல இடங்கள்லயும் மழை அடிச்சி கொளுத்திச்சி. இதனால வெங்காய சாகுபடி நினைச்சபடி நடக்கல. அதனால வெங்காய சப்ளைக்கு நார்த் இந்தியாவையே நம்பியிருந்த நம்ம சந்தையிலயும் வெங்காய வரத்து கணிசமா குறைஞ்சிருச்சி. வரத்து குறைஞ்சிதே தவிர நம்மோட தேவை குறையல.  அதனால கிலோ பதினோரு ரூபாய்க்கு வித்துக்கிட்டிருந்த வெங்காயம் படிப்படியா அதிகரிச்சி இப்போ அறுபது ரூபாய எட்டிப் புடிச்சிருக்கு.
இத ஆங்கிலத்துல சொன்னா the prices of a commodity goes up when the supply is unable to meet the demand. இன்னும் சிம்பிளா சொல்லணும்னா ஒரு பொருளோட சந்தை வரத்து அதன் தேவையைக் காட்டிலும் அதிகமா இருந்தா அதன் விலை குறையும். அதுக்கு நேர் எதிரா தேவை வரத்தை விட அதிகமா இருந்தா அதன் விலை உயரும் (when the suplly is more than the demand the prices go down. It goes up when demand is more than the supply.). 
இதுதான் விலைவாசி ஏறி இறங்குவதன் அடிப்படை நியதி (basic principle)
இதை அப்படியே இந்திய ரூபாயின் மதிப்புடன் ஒப்பிட்டு பாக்கலாம்.
அன்னிய செலவாணி சந்தையில் (forex market) டாலருக்கு (ஏனெனில் இப்போதும் உலக வர்த்தகத்தில் வாங்கல் விக்கல் எல்லாமே டாலரில்தான் நடக்கிறது) ஏற்படும்  தேவைகள்தான் அதன் மதிப்பை (விலையை) நிர்ணயிக்கின்றன.
இந்தியாவில் டாலருக்கு தேவை எப்போதெல்லாம் ஏற்படுகிறது?
1. நாட்டின் Trade deficit அதிகரிக்கும்போது. அதாவது நாட்டின் இறக்குமதி அதன் ஏற்றுமதியை விட அதிகரிக்கும்போது. ஒரு நாட்டின் ஏற்றுமதி மதிப்பிற்கும் அதன் இறக்குமதி மதிப்பிற்கும் இடையிலுள்ள வித்தியாசம்னு சொல்லலாம். ஆனா இந்த இரண்டுமில்லாத விஷயங்களும் இருக்கு. அத அப்புறம் பாக்கலாம். (இந்திய இறக்குமதியில் 35% பெட்ரோல் போன்ற எரிபொருட்களும் அதற்கு அடுத்தபடியாக 11% தங்கமும் இடம் பெறுகிறதாம்).
2.அன்னிய முதலீட்டாளர்கள் தங்களுடைய இந்திய முதலீட்டை மீண்டும் தங்கள் நாட்டுக்கு திருப்பி எடுத்துக்கிட்டு போகும்போது.
இது ரெண்டும்தான் இன்றைய பரிதாப நிலைக்கு முக்கிய காரணங்கள்னு சொல்றாங்க.
இந்த ரெண்டுக்கும் அப்புறமும் விஷயங்கள் இருக்கு:
1. இந்திய நிறுவனங்கள் அன்னிய நாடுகளில் செய்யும் முதலீடுகள். (டாட்டா இங்கிலாந்துலருக்கற கோரஸ்னு ஒரு பெரிய ஸ்டீல் கம்பெனிய வாங்குனத இதுக்கு உதாரணமா சொல்லலாம்).
அதுமட்டுமில்லா,
2..மந்தமான இந்திய பொருளாதார சூழல். இங்க வந்து முதலீடு பண்ணா லாபம் வருமான்னு அன்னிய முதலீட்டாளர்கள் மனசுல ஏற்படற ஒரு தயக்கம். சமீப காலத்துல டாலர் முதலீடுகள் குறைஞ்சி போறதுக்கு இதுதான் முக்கிய காரணம்.  ஏற்கனவே செஞ்சிருந்த முதலீட்டையும் திருப்பி எடுத்துக்கிட்டு போய்கிட்டிருக்கறப்போ புது முதலீட்ட எதிர்பாக்கறது முட்டாள்தனம் இல்லையா?
3. அமெரிக்க மத்திய வங்கியின் பொருளாதார கொள்கைகளில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள்.
இந்தியாவுலருக்கற முதலீட்டையெல்லாம் மறுபடியும் அமெரிக்காவுக்கே கொண்டு போனதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்? எங்க லாபம் ஜாஸ்தியோ அங்கதான முதலீட்டாளர்கள் போவாங்க? அதுதான் இப்ப நடக்குது. சமீபத்திய கணக்கெடுக்கின்படி இந்தியாவுல சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டிருக்காம். அதாவது சுமார் ரூ.90,000 கோடி!  இதுல பெரும்பங்கு இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. போன மூனு மாசமா இந்திய ஷேர் மார்க்கெட் யோயோ (yoyo)மாதிரி ஏறவும் இறங்கவும் அன்னிய முதலீட்டாளர்கள் எடுக்கறதும்
போடறதுமா இருக்கறதுதான் காரணம்.
உலக பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றங்கள்.
நேரு காலத்துலருந்து நரசிம்மராவ் காலம் வரைக்கும் இந்திய பொருளாதாரம் உலக பொருளாதாரத்துலருந்து விலகியே இருந்துதுங்கறது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்பல்லாம் உலக சந்தையில ஏற்படற எந்த மாற்றமும் நம்மை அவ்வளவா பாதிச்சதில்லை. ஆனா நரசிம்மராவ் காலத்துல இந்திய பொருளாதரத்துல தாரளமயமாக்கல்னு ஒரு புது கொள்கைய கொண்டு வந்ததுக்கப்புறம் இந்திய பொருளாதாரம் உலக சந்தையோட ஒருங்கிணைக்கப்பட்டாச்சி (integrated). அதாவது அன்னிய நாட்டுக்காரங்க அவங்க பணத்த இந்திய சந்தையில முதலீடு செய்றதுக்கு தாராளமா அனுமதிக்கப்பட்டாங்க. அத்தோட இந்திய கம்பெனிங்கள்ல ஒரு குறிப்பிட்ட விழுக்காடு முதலீடு செய்யவும் பர்மிட் செஞ்சாங்க. அதனால அமெரிக்க டாலர் அதிக அளவுல இந்தியாவுக்குள்ள வர ஆரம்பிச்சிது. இந்தியாவோட அன்னிய செலவாணி கையிருப்பும் ரிக்கார்ட்னு சொல்ற அளவுக்கு கட்டுக்கடங்காம அதிகமாச்சி. இதுக்கு நாங்கதான் காரணம்னு நரசிம்மராவ் அரசு மட்டுமில்லீங்க அவங்கள தொடர்ந்து வந்த NDAவும் சொல்லி எலெக்‌ஷன்ல ஓட்டு வாங்குனதும் உண்மை.
அப்பவே இந்த கொள்கை எதிர்காலத்துல இந்தியாவுக்கு எதிரா திரும்பும்னு எப்பவும் மாதிரியே கம்யூனிஸ்ட்காரங்க கூப்பாடு போட்டாங்க. அவங்க மட்டுமில்லாம அதுவரைக்கும் சந்தையை ஆட்டிப்படைச்சிக்கிட்டிருந்த டாட்டா, பிர்லா, அம்ம்பானி போன்ற இந்திய முதலாளிங்களும் இது சரியில்லைன்னாங்க. அன்னிய நாட்டு முதலீட்டாளர்கள் லாபம் கிடைக்கும்னுதான் இங்க வராங்க அது இல்லேன்னு ஆயிருச்சின்னா கண்ண மூடி திறக்கறதுக்குள்ள தங்களோட பணத்தை தூக்கிக்கிட்டு பறந்துருவானுங்க, ஆனா நாங்க அப்படியில்ல லாபம்னாலும் நஷ்டம்னாலும் நாங்க தொடர்ந்து சந்தையிலதான் இருப்போம்னாங்க. ஆனா வந்து குவிஞ்ச டாலரோட மயக்கம் அன்னைக்கி ஆட்சியிலிருந்தவங்களுக்கு - அது காங்கிரசானாலும் பிஜேபியானாலும் (இந்த ரெண்டு ஆட்சியிலயும் சில சமயங்கள்ல கம்யூனிஸ்ட்டும் பார்ட்னரா இருந்தாங்கங்கறதும் உண்மைதான். ஆனா அது அவங்களுக்கு மறந்து போச்சி) - புரியல, இல்லன்னா புரியாத மாதிரி பாவலா பண்ணாங்க.
அவங்க சுயநலத்தோட சொன்னாங்களோ இல்ல பொதுநலத்தோட சொன்னாங்களோ இப்ப அவங்க அன்னைக்கி சொன்னதுதான் நடக்குது. இங்க நிலமை சரியில்லேன்னு தெரிஞ்சதும் அன்னிய முதலீட்டாருங்க பணத்தோட
பறந்துக்கிட்டே இருக்காங்க.
இதுதான் இந்திய பணத்தின் வீழ்ச்சிக்கு காரணம்.
இதவிட சிம்பிளா சொல்லுங்களேன்ன்னு நீங்க சொல்றது கேக்குது.
அமெரிக்க டாலர் இந்தியாவுல யாருக்கெல்லாம் வேணும்னு பாக்கலாம் (அதாவது டிமான்ட் பண்றவங்க).
1. இறக்குமதி பண்றவங்களுக்கு. இவங்க இறக்குமதி பண்ற பொருட்களுக்கு காசு குடுக்கணும்னா டாலர்லதான் குடுக்கணும். அத அவங்க கணகு வச்சிருக்கற பேங்க்லருந்துதான் வாங்கணும். பேங்க் சந்தையிலருந்து வாங்கணும்.
அதாவது இன்னொரு பேங்க்லருந்து. எல்லா பேங்குகளும் சேர்ந்து நடத்தறதுதான் அன்னிய செலவாணி சந்தை (forex market).
2.அன்னிய முதலீட்டாளர்கள் தங்களோட முதலீட்டை மறுபடியும் எடுத்துக்கிட்டு போறப்பவும் அவங்களுக்கு டாலர்லயே திருப்பி குடுத்தாகணும். இதுக்கும் அன்னிய செலவாணி சந்தையிலருந்துதான் டாலர வாங்கணும்.
3.வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்கள். இவங்களும் இந்த சந்தையிலதான் இந்திய பணத்த டாலரா மாத்தணும்.
இவங்க மூனு பேரும்தான் இந்த சந்தையிலருந்து டாலர வாங்கறதுல முக்கியமானவங்க.
இந்த சந்தையில டாலர விக்கறவங்க (அதாவது சப்ளை பண்றவங்க)
 
 
1. இந்திய ஏற்றுமதியாளர்கள்
 
இவங்க ஏற்றுமதி செஞ்ச பொருட்களோட விலை வெளிநாட்டுக்காரங்கக் கிட்டருந்து அவங்க பேங்க் வழியா டாலரா வரும். அத அப்படியே கையில வச்சிக்க முடியாது. குறிப்பிட்ட நாளுக்குள்ள சந்தையில வித்தாகணும்.
2.அன்னிய முதலீட்டாளர்கள்
 
இந்திய நிறுவனத்திலோ இல்ல பங்கு சந்தையிலோ முதலீடு செய்ய விரும்பற அன்னிய கம்பெனிங்க அவங்களோட டாலர், யூரோ, பவுன்ட் ஸ்டர்லிங் மாதிரி பணத்தையும் இந்த சந்தையிலதான் வித்தாகணும். அதாவது அவங்க முதலீடு எந்த கம்பெனிக்கு போய் சேருதோ அந்த கம்பெனிங்க அவங்க பேங்க் வழியா சந்தையில வித்துருவாங்க. பங்கு சந்தையில முதலீடு செஞ்சா அந்த பங்குகள அவங்களுக்கு வித்த ஆளுங்க (கம்பெனிங்க) அவங்களோட பேங்க் வழியா சந்தையில வித்துருவாங்க.
இவங்க ரெண்டு பேரும்தான் இந்த சந்தையில டாலர விக்கறதுல முக்கியமானவங்க.
டாலர விக்கறவங்கள சப்ளையருங்கன்னும் டாலர வாங்கறவங்கள டிமான்ட் பண்றவங்கன்னும் சொல்லலாம்.
இந்த சந்தையில டாலர் சப்ளையர்ங்கள விட டிமான்ட் பண்றவங்க ஜாஸ்தியானா டாலர் விலை கூடும். நேர் எதிரா இருந்தா டாலர் விலை குறையும்.
இதுதாங்க மேட்டரே... இத விட சிம்பிளா சொல்ல முடியாதுன்னு நினைக்கறேன்.
இந்த ஏத்த இறக்கத்துல தலையிட்டு ஏதாச்சும் செய்ய முடியும்னா அது இந்திய மத்திய ரிசர்வ் வங்கி இல்லன்னா ஆட்சியிலருக்கற மத்திய அரசு - குறிப்பா சொல்லணும்னா நாட்டின் நிதி மந்திரி.
ரிசர்வ் வங்கி நினைச்சா டாலர் எப்பல்லாம் விலை ஏறுதோ அப்போ தங்களோட கையிருப்புலருக்கற டாலர சந்தையில விக்கலாம். அதாவது டாலர் தேவைப்படற வங்கிகளுக்கு குடுக்கறது.
சந்தையில டாலர் எப்பல்லாம் அதிகமா வருதோ அப்பல்லாம் அத பேங்குகள்கிட்டருந்து வாங்கிக்கிறது.
அவங்க இல்லாம மத்திய அரசு செய்யக் கூடியது என்னன்னா இங்கருந்து போனாப் போறும்னு நினைக்கற அன்னிய முதலீட்டாளர்கள திருப்திப்படுத்தற விஷயமா ஏதாச்சும் செய்யிறது. சாதாரணமா டாலர் ஒரே சீரா உள்ள வந்துக்கிட்டே இருக்கறதுக்கு அன்னிய முதலீடு கொள்கையை ஒரே சீரா வச்சிக்கிட்டிருக்கறது ரொம்ப அவசியம். அது இல்லாம நினைச்சா நீங்க இஷ்டம் போல வரலாம்னு சொல்றது கொஞ்ச நாள் கழிச்சி நீங்க வரத்தேவையில்லேங்கறா மாதிரி புதுசு புதுசா கண்டிஷன் போடறதுன்னு ஒரு அரசு செஞ்சா இவனுங்கள நம்பி எப்படிறா நம்ம பணத்த இங்க வச்சிக்கிட்டிருக்கறது நினைச்சி இருக்கறவணும் ஓடிருவான்.
அதான் இப்ப மெயினா நடக்குது. புதுசா வரலாம்னு நினைச்சவனும் மனச மாத்திக்கிட்டா இங்க இருக்கறவனும் விட்டாப் போறும்னு ஓடிக்கிட்டிருக்கான்.
உதாரனத்துக்கு சில்லறை வணிகத்துல அன்னிய முதலீட்டாளர்களை அனுமதிக்கறதா வேணாமான்னு தெரியாம மத்திய அரசு ஆடுன ஆட்டத்த அவ்வளவு சீக்கிரம் அவங்க மறந்துருவாங்களா?
அதனால இப்பத்தைக்கி அன்னிய முதலீட்டாளர்கள் தாஜா பண்ணி இந்தியாவுக்குள்ள வரவைக்க முடியாதுங்கறது மத்திய அரசுக்கு தெரிஞ்சி போச்சி. வருமானம் குறைஞ்சி போச்சின்னா செலவ குறைச்சித்தான ஆகணும்? டாலர் உள்ள வர்றது குறைஞ்சிட்டதால வெளிய போற டாலரையாவது முடிஞ்ச மட்டும் குறைப்போம்னு நினைச்சி  செஞ்சதுதான்:
 
1. தங்க இறக்குமதி வரிய இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஏத்துனது. இந்த வருசத்து மொத்த தங்க இறக்குமதி 850 டண் மேல போகக் கூடாதாம். ஆனா தங்கத்துக்கு இந்தியாக்காரங்க மத்தியில இருக்கற டிமான்ட் குறையவே இல்லையாம். அதனால இனியும் வரிய கூட்டறதுக்கு சான்ஸ் இருக்காம்! தங்கம்தான் அதிக லாபம் தரும்னு நினைச்சா அதிக விலையும் குடுத்துத்தான் ஆவணும், வேற வழியில்லை.
2. அதே மாதிரி பெட்ரோல் இறக்குமதியும். இந்திய மதிப்பு குறைஞ்சிக்கிட்டே இருக்கறவரைக்கும் பெட்ரோல் விலை ஏறிக்கிட்டேதான் இருக்கும். புலம்பி பிரயோஜனம் இல்லை. வேணும்னா வாரத்துக்கு ஒரு நாள் பஸ்லயோ, ஷேர் ஆட்டோவுலயோ இல்லன்னா சைக்கிள்லயோ ஆஃபீஸ்க்கு போங்க... உடம்பும் இளைக்கும்.
2. இந்திய கம்பெனிங்களோட அன்னிய முதலீட்டு அளவை குறைச்சது. இனி எந்த இந்திய கம்பெனியும் மத்திய அரசோட அனுமதியில்லாம அன்னிய கம்பெனிங்கள வாங்கிற முடியாது.  அவங்கக்கிட்ட டாலர் கையிருப்பு ஜாஸ்தியாருந்தா இந்திய சந்தையிலதான் விக்கணும்...
இந்த மூனையும்தாம் இந்திய அரசாங்கம் இப்பத்தைக்கி செய்ய முடியும்.
இன்னொன்னும் செய்யலாம். நிறைய இந்திய ஐ.டி. கம்பெனிங்க (இன்ஃபோசிஸ் இதுல முக்கியமான கம்பெனி) தங்களோட டாலர் பணத்த அயல்நாட்டு வங்கிகள்ல குவிச்சி வச்சிருக்கறதா கேள்வி. அதையெல்லாம் திரும்ப இங்க கொண்டு வரணும்னு ஒரு கன்டிஷன் போடலாம். அதுக்கு ஏதாச்சும் வரி விலக்கு அளிச்சாலும் அது உடனே ரிசல்ட் குடுக்க வாய்ப்பிருக்கு. ஆனா அவ்வளவு நாட்டுப்பற்று உள்ளவங்க இல்லை நம்ம முதலாளிங்கங்கறது வேற விஷயம்.
இது தேர்தல் வருடம். அதனால பார்லிமென்டையே ஒழுங்கா நடத்த முடியாம தடுமாறுற ஒரு அரசாங்கத்தால அன்னிய முதலீட்டாளர்கள மறுபடியும் இந்தியாவுக்குள்ள வர வைக்கிற மாதிரி பெரிய பொருளாதார முடிவுகள் எடுக்க முடியாதுங்க. அப்படியே எடுத்தாலும் இப்ப இருக்கறவங்க வர்ற தேர்தல்ல தோத்துட்டா அடுத்த வர்ற அரசு என்ன செய்யுமோன்னு அன்னிய முதலீட்டாளர்க நினைப்பாங்க இல்ல?
அதனால காருக்கு டிங்கரிங் பண்றா மாதிரி இப்பத்தைக்கி இத தட்டி, அத தட்டி மேனேஜ் பண்ண வேண்டியதுதான்.
அதத்தான் ப.சிதம்பரம் செஞ்சிக்கிட்டிருக்கார்.
இன்றைய நிலமையில யார் அந்த பதவியில இருந்தாலும் இதத்தான் செய்ய முடியுங்க...
வீணா புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லை....
அன்னிய செலவாணி சந்தையில ரூபா மதிப்பு விழுந்தா ஆட்டோமேட்டிக்கா நேரடிய பலனடையப் போறது யாருன்னு தெரியுதா? இன்னைக்கி இதப்பத்தி கொஞ்சம் சத்தமாவே புலம்பற அயல்நாட்டுல வேலை செய்யிற நம்ம ஆளுங்கதான்.
டாலர்ல சம்பாதிக்கறவங்களுக்கு இது ஒரு எதிர்பார்க்காத வரப்பிரசாதம்தானே.... போன மாசம்வரைக்கு, 500 டாலர் (25,000/-) வீட்டம்மாவுக்கு அனுப்பிக்கிட்டுருந்த இந்தியாகாரர் இந்திய ரூபா இப்படியே விழுந்து ஒரு டாலருக்கு ரூ.70/-ன்னு ஆவுதுன்னு வையிங்க... அப்போ அவர் அனுப்பற 500 டாலரோட மதிப்பு ரூ.35,000/- ஆயிருமே... அவரோட வீட்டம்மாவுக்கு ஒரேயடியா ரூ.10000/- இன்க்ரிமென்ட் கிடைச்சா மாதிரிதானே?
அத நினைச்சி சந்தோஷப்படறத விட்டுப்போட்டு... எதுக்கு நாட்டப் பத்தி கவலைப்படறீங்க?
சரிங்க, என்னெ மாதிரி இந்தியாவுல சம்பாதிக்கறவங்களுக்கு இதனால பெருசா இழப்பிருக்கா? பெட்ரோல் விலை ஏறும். அத தவிர பெருசா இழப்பு நமக்கு இருக்கப்போவதில்லை... தங்கம் விலை ஏறும். அதால பாதிக்கப்படப் போறவங்க எத்தனை சதவிகிதம் இருப்பாங்க? விடுங்க கவலைய.
இன்னொரு விஷயமும் சொல்றேன்.. இந்த பண வீழ்ச்சி இந்தியாவுல மட்டுமில்லீங்க BRICS நாடுகள்னு சொல்ற நாடுகள்ல சீனா மற்றும் கனடாவ தவிர பிரேசில், ரஷ்யா மட்டுமில்லாம இந்தோனேஷியா, தாய்லாந்து மாதிரியான நாடுகள்லயும் நிலையும் இதேதான்....
எங்கல்லாம் பொருளாதாரம் மந்த நிலையிலோ இருக்கோ... யாரெல்லாம் அன்னிய முதலீட்டாளர்களை நம்பி பொழப்ப நடத்தறாங்களோ அங்க எல்லாமே இதே நிலைதான்...
********

செவ்வாய், 1 அக்டோபர், 2013

உலக மயமாக்கல் என்றால் என்ன?

"உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது...மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...நாடுகள் முன்னேற்றம் அடைந்துக் கொண்டு இருக்கின்றன" என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக்கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள்.

"உலகமயமாக்கல் என்றப் பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் அவற்றினுள் பங்கிட்டுக் கொண்டு கொள்ளை அடிக்கும் நிலையே இன்று உலகமயமாக்கல் என்ற ஒரு கோட்பாட்டின் படி நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றது. நம்புவதற்கு கடினமாக இருக்கின்றது அல்லவா...ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பையும், கட்டுமான வசதிகளையும் தந்து இருக்கும் நிறுவனங்களா எங்களை கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றன என்ற எண்ணம் எழுகின்றது அல்லவா...!!! அங்கே தான் அந்த நிறுவனங்களின்...உலகமயமாக்கல் என்ற கோட்பாட்டின் வெற்றி அடங்கி இருக்கின்றது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற முகமூடிகளை அணிந்துக் கொண்டு உலாவும் அவைகளின் உண்மையான முகங்களை காண்பது என்பது சாதாரண மக்களுக்கு எளிதான விடயம் அல்ல தான். ஆனால் உலகம் இன்று மிக வேகமாக அழிவுப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது அதற்கு காரணியாக இருக்கும் 'உலகமயமாக்கல்' என்னும் கோட்ப்பாட்டின் முகமூடியை கிழித்து அதன் உண்மையான முகத்தினை உலகிற்கு காட்ட வேண்டிய சூழலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது அதிகமாக இருக்கின்றது." இதுவே ஜான் பெர்கின்ஸ் அவர்களின் கருத்தாகும். இந்நிலையில் அப்படிப்பட்ட முகத்திரையை கிழிக்கும் ஒரு முயற்சியாகவே இந்தப் புத்தகம் வெளி வந்து இருக்கின்றது. இப்பொழுது இந்தப் புத்தகம் கூறும் கருத்தினை நாம் பார்த்து விடலாம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுதந்திரமான நாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தன. ஒரு சில பெரிய நாடுகளின் கீழேயே உலகின் பல்வேறு நாடுகள் அடிமைத் தளையில் கட்டுண்டு கிடந்தன. அந்த பெரிய நாடுகளும் தமக்கு கீழே இருந்த நாடுகளின் இயற்கை வளங்களையும் சரி மனித வளங்களையும் சரி கேட்பார் யாருமின்றி கொள்ளையிட்டுக் கொண்டு வந்தன.

அவ்வாறு கொள்ளையிட்டுக் கொண்டு வந்த நாடுகளின் இடையே நிலவிய பொறாமை போட்டி போன்ற காரணிகளினாலேயே உலகம் அதுவரை கண்டு இராத இரு மாபெரும் யுத்தங்கள் நிகழப் பெற்றன. அவற்றின் முடிவில் அதுவரை அடிமைத்தளையில் கட்டுண்டு கிடந்த நாடுகள் பலவும் சுதந்திரம் அடைய ஆரம்பித்தன. "எங்கள் நாடு இது...எங்களை நாங்களே ஆண்டுக் கொள்கின்றோம்...அந்நியர்களான நீங்கள் வெளி ஏறுங்கள்" என்ற முழக்கங்கள் அனைத்து நாடுகளிலும் கேட்க ஆரம்பிக்க, வேறு வழியில்லாது அந்த நாடுகளை விட்டு விருப்பமில்லாது வெளியேற ஆரம்பித்தன மற்ற நாடுகள்.

அவைகள் வெளியேறியதற்கு முக்கியமானதொரு காரணம், அவைகள் வெளியேற மறுத்தால் மீண்டும் ஒரு போர் வெடிக்கலாம்...அந்த போர் எவ்வித முடிவுகளைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது...ஏற்கனவே சப்பானில் நிகழ்ந்த அணுக்குண்டு தாக்குதலின் தாக்கத்தினை உலகம் கண்டு இருந்தது. மேலும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உலகம் இரண்டு அணிகளாக பிரிந்து இருந்தது. ஒரு அணி சோவியத் யூனியனின் கீழ் பொது உடைமைக் கொள்கைக்காக திரண்டு இருந்தது. மற்றொரு அணி அமெரிக்காவின் கீழ் முதலாளித்துவக் கொள்கைக்காகத் திரண்டு இருந்தது. இந்நிலையில் எந்த ஒரு நாட்டின் மேலும் மற்றொரு நாடு நேரடியாகத் தாக்குதல் நடத்தினால் மீண்டும் ஒரு மாபெரும் யுத்தம் வெடிக்கும் அபாயம் இருந்துக் கொண்டே இருந்தது. எனவே நேரடியான யுத்தம் என்பது அனைத்து நாடுகளினாலும் இயன்ற அளவுத் தவிர்க்கப்பட்டே வந்து கொண்டு இருந்தது.

ஆனால் இங்கே தான் நாம் ஒரு விடயத்தினை காண வேண்டி இருக்கின்றது. பல நாடுகள் விடுதலைப் பெற்று விட்டன. விடுதலை என்றால்... அந்த நாடுகளை அந்த நாட்டினைச் சார்ந்தவர்களே ஆண்டுக் கொள்ளலாம்...அந்த நாடுகளின் வளங்களை அந்த நாட்டினைச் சார்ந்தவர்களே பயன் படுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு அந்த நாட்டின் மீதோ அல்லது அந்த வளங்களின் மீதோ யாதொரு உரிமையும் கிடையாது. இப்படி இருக்க அது வரை அரசுகளின் உதவியோடு அந்த நாட்டு வளங்களைச் சுரண்டி கொள்ளை இலாபம் ஈட்டிக் கொண்டு வந்த பெரு நிறுவனங்களுக்கு இத்தகைய ஒரு சூழல் இக்கட்டினைத் தரும் தானே.

அந்தந்த நாடுகளே அவைகளின் வளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால் இந்த நிறுவனங்கள் எந்த வளங்களைச் சுரண்ட முடியும்? பின்னர் எவ்வாறு கொள்ளை இலாபத்தினை ஈட்டிக் கொள்ள முடியும்? முடியாதல்லவா...அங்கே தான் அந்த நிறுவனங்களுக்கு பிரச்சனை தொடங்குகின்றது. எக்காரணத்தினை முன்னிட்டும் அவைகளுக்கு அவைகள் ஈட்டும் இலாபத்தினையும் சரி அவைகளுக்கு உள்ள அதிகாரத்தினையும் இழக்க மனம் கிடையாது. ஆனால் அனைத்து நாடுகளும் சுதந்திரம் அடைந்தப் பின்பு இவர்களால் அந்த நாட்டின் வளங்களின் மேல் பழையக் காலம் போல் உரிமைக் கொண்டாட சட்டப்படி வாய்ப்பு இல்லாது போய் விட்டது. இந்நிலையில் அந்த நிறுவனங்கள் மீண்டும் அந்த வளங்கள் மேல் தாங்கள் செல்வாக்கினைப் பெற வேண்டுமானால்,

1) அந்த நாடுகளை மீண்டும் அடிமைப்படுத்த வேண்டும். அல்லது
2) அந்த நாட்டினை ஆள்பவர்கள் அவர்கள் நாட்டின் வளங்களை எடுத்துக் கொள்வதற்கு இந்த நிறுவனங்களுக்கு அனுமதியினை வழங்க வேண்டும்.

இவ்விரண்டு வழிகள் மூலமாக மட்டுமே அந்த நிறுவனங்கள் மீண்டும் அந்த வளங்களை அடைய முடியும்.

ஆனால் நாம் முன்னர் கண்டதுப் போல நாடுகளை நேரடியாக யுத்தத்தின் வாயிலாக அடிமைப்படுத்துவது என்பது இயலாத ஒரு காரியமாகவே இருந்தது. காரணம் ஒரு சிறு இராணுவ நடவடிக்கைக் கூட ஒரு மாபெரும் போரினை தொடங்கி வைக்கக் கூடிய வல்லமைப்பெற்று இருந்தது என்று நாம் கண்டோம். அப்படி இருக்க ஒரு நாட்டினை மீண்டும் நேரடியாக அடிமைப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒரு காரியமாகவே இருந்தது.

இந்நிலையில் அந்த நிறுவனங்கள் மற்ற நாடுகளின் வளங்களை அடைய வேண்டும் என்றால் அந்த நாட்டினை ஆள்பவர்களே அந்த நிறுவனங்களுக்கு அவர்கள் நாட்டின் வளங்களைத் தர வேண்டும்...ஆனால் கூறுவதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் இது சாத்தியப்பட கடினமான ஒன்றாகும். காரணம் அந்த நிறுவனங்களின் தன்மையைக் குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்களும் நன்றாக அறிந்து வைத்து இருந்தனர். எனவே அந்த நிறுவனங்களுக்கு மீண்டும் அவர்களின் நாட்டினுள் அனுமதி அவர்கள் வழங்குவது என்பது எளிதில் நடவாததொரு காரியமே ஆகும்.


நிலைமை இப்படி இருக்க யுத்தங்கள் இல்லாது அந்த வளங்களை அந்த நிறுவனங்கள் அடைய வேண்டும் என்றால் வளம் உள்ள அந்த நாடுகளை ஆள்பவர்கள் இந்த நிறுவனங்களின் பேச்சினைக் கேட்பவர்களாக இருக்க வேண்டும்...அவ்வாறு இல்லாவிடின் அந்த நிறுவனங்களின் பேச்சினைக் கேட்பவர்கள் அந்த நாடுகளின் தலைவர்களாக கொண்டு வரப்பட வேண்டும். இந்த வழிமுறையினைத் தான் அந்த நிறுவனங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டன. இந்த வழிமுறையினை நடைமுறைப்படுத்த அந்த நிறுவனங்கள் அவற்றின் அரசின் உதவியோடு இரு வழிகளைப் பெருன்பான்மையாக கடைபிடித்து இருக்கின்றன என்பதனை வரலாற்றில் இருந்து நாம் காண முடிகின்றது.

1) மக்களால் தேர்ந்து எடுத்த தலைவர்களை கொன்றோ, அல்லது ஒரு இராணுவ புரட்சியினையோ கலகத்தையோ தோற்றுவித்து தமக்கு வேண்டாத தலைவர்களை நீக்கி தமக்கு உரித்தான தலைவர்களை ஆட்சியில் அமர வைத்தோ, அந்த நாடுகளின் மேல் தங்களின் பிடியினை அந்த நிறுவனங்கள் உறுதி செய்துக் கொள்கின்றன.

2) ஒரு நாட்டிற்கு அதனால் திருப்பித் தர இயலாத வண்ணம் கடனினை வழங்கி, அதனைக் கடன்கார நாடாக்கி பின்னர் அந்த நாட்டில் இருந்து உரிமையாக வளங்களையும் இன்ன பிற சலுகைகள் மற்றும் உரிமைகளையும் பெற்றுக் கொள்கின்றன.

மேலே உள்ள இரு வழிமுறைகளில் நாம் முதலாவது பற்றி ஓரளவு அறிந்து இருப்போம். அதாவது ஆட்சி மாற்றங்கள், புரட்சிகள் இவற்றைப் பற்றி செய்திகளில் எப்பொழுதாவது செய்திகள் வந்து இருக்கும்...நாமும் கண்டு இருப்போம். ஆனால் அந்த இரண்டாவது வழிமுறைதான் சற்று புதிதாக இருக்கின்றது. கேட்பதற்கு நம் நாட்டில் விளங்கும் கந்து வட்டி முறையினை போன்று தோன்றினாலும் அதெப்படி ஒரு நிறுவனம் ஒரு நாட்டிற்கு கடனினை வழங்கி அந்த நாட்டினை கடன்கார நாடாக்க முடியும்? ஒரு நாட்டினால் அதனால் ஒரு கடனைத் திருப்பித் தர இயலுமா அல்லது இயலாதா என்று அறியாத நிலையிலா கடனினை வாங்க முடியும்? போன்றக் கேள்விகள் எழத் தான் செய்கின்றன.

இக்கேள்விகளுக்குத் தான் ஜான் பெர்கின்ஸ் அவரது நூலில் விடையினைக் கூறுகின்றார்.

அவரின் கூற்றுப்படி இன்று எந்த ஒரு பேரரசும் மற்ற நாடுகளின் மீது நேரிடியாக தங்களது ஆதிக்கத்தை இராணுவத்தின் மூலம் வெளிப்படுத்த இயலாது இருக்கும் நிலையில், அந்த பேரரசுகள் அவைகளின் வணிக நிறுவனங்களின் மூலமே அவற்றின் செல்வாக்குகளைப் பெருக்கிக் கொள்கின்றன. அதாவது மற்ற நாடுகளின் வளங்களைக் கொள்ளைக் கொள்வதில் வளர்ந்த நாடுகளின் நிறுவனங்களும் அந்த நாடுகளின் அரசுகளும் ஓரணியில் நின்றே செயல்படுகின்றன. அவற்றிற்கு துணையாக உலக வங்கியும் செயல்படுகின்றது என்பதும் ஜான் பெர்கின்ஸ் அவர்கள் முன் வைக்கும் வாதம் ஆகும். அதாவது அரசும் வணிக நிறுவனங்களும் தனித் தனியாக இயங்கிய நிலை மாறி இரண்டுமே ஒன்றாக இயங்கும் ஒரு நிலையே இன்றுக் காணப்படுகின்றது என்று அவர் கூறுகின்றார். வணிக நிறுவனங்களின் தலைவர்கள் அரசியலில் பதவிகள் வகிப்பதும், அரசில் பதவியில் இருப்பவர் வணிக நிறுவனங்களின் பங்குதாரராக இருப்பதும், அவர்களே உலக வங்கியிலும் இருப்பதும் அவர்களின் இந்த இயக்கத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது என்றே அவர் கூறுகின்றார்.

இத்தகைய நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்குச் சென்று தங்களால் மிகைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு "உங்கள் நாட்டினில் நீங்கள் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தினீர்கள் என்றால் உங்களின் வளர்ச்சி இத்தனை வருடங்களில் இத்தனை சதவீதமாக உயரும்...மேலும் இந்த திட்டங்களுக்கு உங்களுக்கு கடன் கொடுக்க உலக வங்கியும் தயாராக இருக்கின்றது...இத்திட்டங்களை உங்களுக்காக உருவாக்கிக் கொடுக்கவும் எங்களது நாட்டு நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன" என்ற வாக்கு உறுதிகளைத் தந்து அந்த நாடுகளை கடன் வாங்க வைக்கின்றன. வளரும் அந்த நாடுகளும் அந்த புள்ளிவிவரங்களை நம்பி கடன் வாங்க ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் கடன் பெற்றுத் தொடங்கிய அந்தத் திட்டங்களால் கணிக்கப்பட்ட அளவு வளர்ச்சி கிட்டாததால், வாங்கிய கடனை திருப்பித் தர இயலாது வெறும் வட்டியினை மட்டுமே கட்டிக் கொண்டு காலத்தைத் தள்ளும் நிலைக்கு அந்த நாடுகள் வருகின்றன என்றும் அந்த நிலையினை பயன்படுத்தி வளர்ந்த நாடுகளும் அவற்றின் நிறுவனங்களும் அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடித்துக் கொள்ள தொடங்குகின்றன என்றும் ஜான் பெர்கின்ஸ் அவர்கள் கூறுகின்றார்.

இன்றைய உலகில் நிகழும் நிகழ்வுகளையும், இவர் இவரது நூலினில் குறிப்பிட்டு இருக்கும் வரலாற்று நிகழ்வுகளையும் சற்றுக் கவனிக்கும் பொழுது இவரின் இந்தக் கூற்றானது சரியானதான ஒன்றாக இருக்கக் கூடும் என்றே நாம் எண்ண முடிகின்றது. நிற்க

இன்றைய நிலையில் உலகமயமாக்கல் என்றப் பெயரில் என்ன நடந்துக் கொண்டு இருக்கின்றது என்று விரிவாக அறிய விரும்புவோர் நிச்சயமாக இந்த புத்தகத்தினைப் படிக்கலாம். உலகை நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு கோணத்திற்கான சாளரத்தினை இந்தப் புத்தகம் திறந்து வைத்தாலும் வைக்கலாம்.

சில குறிப்புகள்:

1) இந்த நூலினில் இவர் அரசியல்வாதிகளும் பெரு நிறுவனத்தின் அதிகாரிகளும் இணைந்துக் கொண்டு வளங்களைக் கொள்ளைக் கொள்கின்றனர் என்றுக் கூறுகின்றார். இதற்கு ஓர் சான்றாக அவர் என்ரான் என்ற அமெரிக்க மின்னாற்றல் நிறுவனத்தின் பங்குதாரராக அமெரிக்க அதிபரான புஷ் இருந்ததையும், அதன் காரணமாக அந்த நிறுவனம் எட்டிய அசுர வளர்ச்சியையும் அவர் குறிப்பிடுகின்றார்.

அதே என்ரான் நிறுவனம் இன்னும் சில அமெரிக்க நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு 1991 இல் இந்தியா எப்பொழுது உலகமயமாக்கல் என்றக் கொள்கையின் வாயிலாக உலக நிறுவனங்களுக்கு தனது கதவினைத் திறந்ததோ அப்பொழுது இந்தியாவிலேயே மிகப் பெரிய மின்சாரத் திட்டத்தினை நிறுவ மகாராஷ்டிராவில் நுழைந்தது.

ஆனால் அந்தத் திட்டம் (தாபோல் மின்சாரத் திட்டம் -Dabhol Power plan) மாபெரும் தோல்வியான ஒன்றாக முடிந்தது. மக்களுக்கு எதிரான வன்முறைகள், திரைமறைவு ஒப்பந்த நடவடிக்கைகள், மின்சாரத்துக்கு அதிகமான விலை நிர்ணயித்தல், சுற்றுச் சூழலை மாசு படுத்தியது உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு என்ரான் நிறுவனத்தின் இந்தத் திட்டம் உள்ளாகி பின்னர் பல கோடி உருபாய் செலவிற்கு பின்னர் கை விடப்பட்டது.

2) திடீர் என்று வளர்ந்த அந்த நிறுவனம் 2001 ஆம் ஆண்டில் மோசடிக் குற்றச்சாட்டுகளினால் திவால் ஆனது.

3) அந்த நிறுவனத்திற்காக இந்தியாவில் வாதாடியவர் நமது நாட்டின் நிதி அமைச்சரான ப.சிதம்பரம் அவர்கள்.

4) வணிக நிறுவனங்களின் தலைவர்கள் அரசியல்வாதிகளாக மாறி வணிக நிறுவனங்களுக்காக பாடுப் படுகின்றனர் என்று ஜான் பெர்கின்ஸ் கூறுகின்றார். நம் நாட்டில் வேதாந்தா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் ஒருவராக இருந்தவர் தான் நமது நாட்டின் நிதி அமைச்சரான ப.சிதம்பரம் அவர்கள்.

5) அவரே உள்துறை அமைச்சராக இருந்தப் பொழுது, 'வேதாந்தா' நிறுவனத்திற்கு இலாபம் தரும் கனிம வளங்களை உடைய மலைகளை தருவதற்கு தடையாக இருந்த பழங்குடி மக்களுக்கு எதிராக 'பச்சை வேட்டை'  என்னும் இராணுவ நடவடிக்கைகளை நடத்துவதற்கு ஆதரவு தந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலகமயமாக்கல் தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் போன்ற கொள்கைகள் மூலமாக உலகின் உள்ள வளங்களை எல்லாம் ஒரு சிலத் தனிமனிதர்கள் சுரண்டுவதற்கு அரசியலை வணிக நிறுவனங்கள் பயன் படுத்திக் கொண்டு இருக்கின்றன என்றே நாம் அறிய முடிகின்றது.

இதற்கு நாம் என்ன செய்ய போகின்றோம் என்ற கேள்வியே நம்முடைய தலைமுறையினரை நோக்கிக் காத்துக் கொண்டு இருக்கின்றது.

என்ன செய்யப் போகின்றோம் நாம்?

வியாழன், 26 செப்டம்பர், 2013

Type-Tamil

இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு...

 
 
கணணியின் விசைப் பலகையானது(Key Board) வழமையாக ஆங்கிலத்திலேயே காணப்படும். ஆனால் தமிழில் TYPE பண்ணவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போதுதான் தமிழ் விசைப்பலகையை தேடி ஒடுவதுண்டு. அப்படியில்லாவிடில் StartàAll Programs  இல் Accessories  இனுள் சென்று ON Screen KeyBoard ஐ தமிழில் SELECT பண்ணிவிட்டு பார்த்துப் பார்த்து கஷ்டப்பட்டு அடிப்பதுண்டு. இதற்காக இணைய வசதி உள்ளோர் தமிழ் எழுத்துருமாற்றியை (Tamil Translate) நாடுவதுண்டு. இது இணையவசதி உள்ளபோது மட்டுமே பொருந்தக்கூடியது.  அத்துடன் இணைய வேகம் குறைவாக இருப்பின் தமிழுக்கு மாற்றுவதற்கும் சற்றே நேரமெடுக்கும். ஆனால் இணைய வசதி இல்லாத வேளையிலும் அனைவரினது கணணியிலும் சுலபமாகவும் விரைவாகவும் தமிழில் TYPE பண்ணுவதற்கு எளிமையான மென்பொருள் ஒன்றினை கூகிளானது(google) எமக்குத் தந்துள்ளது. அதனை எப்படி பயன்படுத்துவதென்று பார்ப்போம்.

இதனை எமது கணனியில் நிறுவிக்கொள்ள முதலில் கூகுளை Open பண்ணி அதில் கீழ் காட்டப்பட்டவாறு Type பண்ணி  Enter பண்ணவும்.

இப்போ கூகிளின் தேடல் பதில்கள் வந்திருக்கும். இதில் முதலாவதாக உள்ள Type in Hindi- Google Transliteration  எனும் link ஐ கிளிக் செய்யவும்.

இப்போ உங்களுக்கு கீழே உள்ள விண்டோ வந்திருக்கும்.

இதில் இணையவசதி உள்ளவேளையில் தமிழுக்கு மாற்ற இடதுபக்க மேல்மூலையில் உள்ள HINDI எனும் பட்டனை கிளிக் செய்து விரும்பிய மொழியை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் நாம் இப்போ பார்க்கவேண்டியது இணைய வசதி இல்லாதவேளையில் பயன்படுத்துவது தான்.
இதற்கு மேல் உள்ள அவ் விண்டோவின் வலதுபக்க மேல் மூலையில் New! Download Transliteration IME என்பதை கிளிக் செய்யவும்.  இப்போ உங்களுக்கு கீழ் உள்ளது போன்ற பக்கம் தோன்றும். இதில்மொழித்தெரிவுக்காக தமிழ் என்பதை தெரிவுசெய்து DOWNLOAD Button ஐ கொடுக்கவேண்டியதுதான்...

இப்பக்கத்திற்கு நேரடியாகச் சென்று தரவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும். 
இப்போ கீழே உள்ளதுபோன்று சேமிக்கவா(Save) என கேட்கப்படும். SAVE என்பதை அழுத்தி கணனியில் save செய்து கொள்ளவும்.

பின்னர் கணனியில் எங்கு Download ஆகி உள்ளதோ, அங்கு சென்று அம் மென்பொருளை  Open செய்யவும். இப்போ கீழ் உள்ளது போன்ற விண்டோ தோன்றும். அதிலே RUN என்பதை கிளிக் செய்து கணனியில் நிறுவிக்(Install) கொள்க.




நிறுவுகை(Install) முடிந்ததன் பின்னர் கீழே உள்ளது போன்று டாஸ்க்பாரில்(TaskBar)  “EN” எனும் எழுத்து காணப்படும். “EN“ என்பது மொழி ஆங்கிலம் என்பதாகும். உங்களுக்கு தமிழ் வேண்டுமாயின் “EN“ ஐ கிளிக் பண்ணி அதில் உள்ள “TA“ என்பதை தெரிவுசெய்தால் போதும்.


இதன்மூலம் நீங்கள் ஏதும்  Folder இற்கு பெயர் மாற்றவோ அல்லது தமிழில் Type செய்யவோ முடியும்.
உதாரணம்:
நீங்கள் “தமிழில் எழுதுவதற்கு“ என்பதை ஆங்கிலத்தில் “THAMILIL ELUTHUVATHATKU”  என type செய்தால் போதும்.....

வியாழன், 5 செப்டம்பர், 2013

தகப்பன் சாமி.

எனது தந்தைக்கு சமர்ப்பணம்.

உதிர்ந்த 
பூவிற்கு
உதிரி பூக்களின்
கண்ணீர் அஞ்சலி.

இப்போதுதான்
வாழ்கையின்
நிதர்சனம் என்னவென்று
புரிகிறது.

விதி
என்னிடமிருந்து
உன்னை பிரித்ததா?

உன்னிடமிருந்து
என்னை
பிரித்ததா?

நீ
என்னை
அடித்தாவது
வளர்த்திருக்கலாம்.

கொடுமைக்கார தகப்பன்
என்று பெயரேடுத்திருக்கலாம் .

நானாவது
அழாமல் இருந்திருப்பேன்.

நீ 
எந்த  தேசத்தில் இருக்கிறாய்?

சொல். நான் விரைகிறேன்.

உனக்காக
நான் ஆண்டவனிடம்
வழக்காடுகிறேன்.

விதி
வலியது- கேள்விபட்டிருக்கிறேன்.

விதி
வலி இது - உணருகிறேன்.

விதியின்
வலிமையை காட்டிய அவன்

அதை தாங்கும்
வலிமையை பறித்தான்.
 

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

MUTHAL PATHIVU

- வில் டங்கும் னைத்தும் .

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அகிலமே அ -வில் அடங்கும்போது
அடியேன் மட்டும் விதி விலக்கா என்ன ?

ஆதலால் தான் ஆரம்பிக்கிறேன் - என்

இனிய ப்ளாக்-ஐ -அ -வில்.

ஈக்கள் போல மொய்த்து

உறவுகள் கூடி

ஊன்றுகோலாய் இருந்து

என்றுமே என்னுடன்

ஏணியாய் இருந்து  உதவிட வேண்டுமென

உங்கள் ஆதரவை நல்கிடும் நண்பன்.

ரா.முத்துசாமி